Wednesday, October 21, 2015

ஆறு மனமே ஆறு

ஆறுமனமே ஆறு - அந்த
ஆண்டவன் கட்டளை ஆறு
தேர்ந்து மனிதன் வாழும் வகைக்கு
தெய்வத்தின் கட்டளை ஆறு
தெய்வத்தின் கட்டளை ஆறு!

ஒன்றே சொல்வார் ஒன்றே செய்வார்
உள்ளத்தில் உள்ளது அமைதி
இன்பத்தில் துன்பம் துன்பத்தில் இன்பம்
இறைவன் வகுத்த நியதி!

சொல்லுக்குச் செய்கை பொன்னாகும் - வரும்
துன்பத்தில் இன்பம் பட்டாகும் - இந்த
இரண்டு கட்டளை அறிந்த மனதில்
எல்லா நன்மையும் உண்டாகும்!

உண்மையைச் சொல்லி நன்மையைச் செய்தால்
உலகம் உன்னிடம் மயங்கும் - நிலை
உயரும்போது பணிவு கொண்டால்
உயிர்கள் உன்னை வணங்கும்!

உண்மை என்பது அன்பாகும் - பெரும்
பணிவு என்பது பண்பாகும் - இந்த
நான்கு கட்டளை அறிந்த மனதில்
எல்லா நன்மையும் உண்டாகும்!

ஆசை, கோபம், களவு கொள்பவன்
பேசத் தெரிந்த மிருகம்

அன்பு, நன்றி, கருணை கொண்டவன்
மனித வடிவில் தெய்வம் - இதில்
மிருகம் என்பது கள்ளமனம் - உயர்
தெய்வம் என்பது பிள்ளை மனம் - இந்த
ஆறு கட்டளை அறிந்த மனது
ஆண்டவன் வாழும் வெள்ளை மனம்

Wednesday, January 28, 2015

ஒரு கோப்பையிலே


ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு
ஒரு கோல மயில் என் துணையிருப்பு
இசை பாடலிலே என் உயிர் துடிப்பு
நான் காண்பதெல்லாம் அழகின் சிரிப்பு!

காவியத் தாயின் இளையமகன்
காதல் பெண்களின் பெருந்தலைவன்
மானிட ஜாதியில் தனிமனிதன் நான்
படைப்பதனால் என்பேர் இறைவன்!

மானிட இனத்தை ஆட்டி வைப்பேன் அவர்
மாண்டுவிட்டால் அதை பாடிவைப்பேன் நான்
நிரந்தரமானவன் அழிவதில்லை எந்த
நிலையிலும் எனக்கு மரணமில்லை!

Sunday, March 13, 2011

காலக் கனிதம்

கவிஞன் யானோர் காலக் கணிதம்
கருப்படு பொருளை உருப்பட வைப்பேன்!
புவியில் நானோர் புகழுடைத் தெய்வம்
பொன்னினும் விலைமிகு பொருளென் செல்வம்
இவை சரி யென்றால் இயம்புவ தென்தொழில்
இவைதவ றாயின் எதிர்ப்பதென் வேலை
ஆக்கல் அளித்தல் அழித்தலிம் மூன்றும்
அவனும் யானுமே அறிந்தவை அறிக!
செல்வர்தன் கையிற் சிறைப்பட மாட்டேன்
பதவிவா ளுக்கும் பயப்பட மாட்டேன்

பாசம் மிகுத்தேன் பற்றுதல் மிகுத்தேன்
ஆசை தருவன அனைத்தும் பற்றுவேன்
உண்டா யின்பிறர் உண்ணத் தருவேன்
இல்லா யினெமர் இல்லந் தட்டுவேன்
வண்டா யெழுந்து மலர்களில் அமர்வேன்
வாய்ப்புறத் தேனை ஊர்ப்புறந் தருவேன்
பண்டோர் கம்பன் பாரதி தாசன்
சொல்லா தனசில சொல்லிட முனைவேன்
புகழ்ந்தால் என்னுடல் புல்லரிக் காது
இகழ்ந்தால் என்மனம் இறந்து விடாது!

வளமார் கவிகள் வாக்குமூ லங்கள்
இறந்த பின்னாலே எழுதுக தீர்ப்பு
கல்லாய் மரமாய்க் காடுமே டாக
மாறா திருக்கயான் வனவிலங் கல்லன்
மாற்றம் எனது மானிடத் தத்துவம்
மாறும் உலகின் மகத்துவம் அறிவேன்
எவ்வெவை தீமை எவ்வெவை நன்மை
என்ப தறிந்தே ஏகுமென் சாலை
தலைவர் மாறுவர் தர்பார் மாறும்
தத்துவம் மட்டுமே அட்சய பாத்திரம்

கொள்வோர் கொள்க குரைப்போர் குரைக்க
உள்வாய் வார்த்தை உடம்பு தொடாது
நானே தொடக்கம் நானே முடிவு
நானுரைப் பதுதான் நாட்டின் சட்டம்!